ஆன்லைன் மோகம் எதிரொலி: பண்டிகை காலங்களில் கடைகளில் நேரடியாக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் குறைகிறதா?

தீபாவளிக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.;

Update:2025-10-13 11:48 IST

சென்னை,

இந்தியாவில் 70 சதவீதம் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகையின் விஷேசம் என்னவென்றால் புத்தம் புதிய ஆடை, இனிப்பு, பட்டாசுகள் தான். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகை விற்பனை ஆயுதபூஜை விழாவின் போதே தொடங்கிவிடும். தொடர்ந்து 20 நாட்கள் அனைத்து கடைகளிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு நேரில் சென்று வாங்கி வந்தனர்.

ஆனால் தற்போது ஆன்லைன் மோகம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களில் பலர் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் தேர்வு செய்து அதனை வாங்கி வருகிறார்கள். இதனால் பெரும்பாலான நகரங்களில் உள்ள கடைகளில் தீபாவளி விற்பனை மந்தமாக இருக்கிறது. குறிப்பாக துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் குறைவான அளவிலேயே காணப்படுகிறது என வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையில் புதிய செல்போன் போன்ற பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். இப்போது செல்போன்களை நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்குபவர்களும் குறைந்து வருகின்றனர் என்கின்றனர். இதனால் செல்போன் கடைகளில் வியாபாரம் குறைந்து வருகிறது எனவும் செல்போன் கடை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

பண்டிகை காலங்களில் வீட்டுக்கு தேவையான குளிர்சாதன பெட்டி, மிக்சி, டி.வி., வாஷிங்மெஷின், தீபாவளி சமயங்களில் பட்டாசு ஆகியவற்றின் விற்பனை கடைகளில் அதிகளவில் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது பொதுமக்களிடம் குறைந்து வருகிறது.

இதற்கு என நேரம் ஒதுக்குவதில் தயங்குகிறார்கள். குடும்பத்துடன் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்கிய காலம் மலையேறிவிட்டது. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதையே இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். இந்தநிலை மாறி பொருட்களை கடைக்கு சென்று வாங்குவது சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்