எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு; தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.;
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக உள்பட மேலும் சில கட்சிகள் இணைந்துள்ளன.
அதேவேளை, அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்குமுன் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக குழு சென்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக , பாஜக இடையேயான தொகுதிப்பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முன்னதாக அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.