தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவேண்டும் - கவர்னர் உரையில் வலியுறுத்தல்

மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது வருத்தமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-20 13:07 IST

சென்னை,

கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலவச வீட்டுமனை பட்டா

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகையாகப் பெறுகின்றனர். இத்திட்டத்திற்காக, இதுவரை ரூ.33,464 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி வங்கிக் கடனாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த இதுவரை 3 லட்சம் இலவச வீட்டுமனை இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பழைய ஓய்வூதியத் திட்டம்

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 1.83 லட்சம் புதிய பாசன மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், கட்டணமில்லா வேளாண் மின்சாரம் வழங்கிட கடந்த 5 ஆண்டுகளில் ரூ.26,723 கோடி செலவிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ஒரு முறை பங்களிப்பாக ரூ.13 ஆயிரம் கோடியும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ.11 ஆயிரம் கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு வழங்கும். அதுபோன்று சிறப்புக் காலமுறை ஊதிய முறையில் பணியாற்றி வரும் பணியாளர்களின் சிறப்பு ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும்.

மத்திய அரசு

மத்திய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகி வருவதால், மாநில அரசிற்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது. தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை மத்திய அரசு விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெருந்தடைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ஆண்டுப் பணித் திட்டத்திற்கு, திட்ட ஒப்பளிப்பு வாரியம் அனுமதித்த தொகையை மத்திய அரசு முழுமையாக விடுவிக்காமல் உள்ளது. ரூ.3,548 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காததன் காரணமாக, அத்திட்டத்திற்குரிய முழுச் செலவையும் மாநில அரசே ஏற்றுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களின் சீரமைப்பு காரணமாக மாநிலங்கள் பெருமளவிலான வரி வருவாய் இழப்பினைச் சந்தித்து வரும் வேளையில், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய வரி வருவாயை மடைமாற்றும் வகையில் மத்திய அரசானது மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிப்பதைத் தவிர்த்திட நமது அரசு வலியுறுத்துகிறது.

மீனவர்கள் பிரச்சினை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மேலும் கூடுதல் நிதி ஆதாரங்களை ஒதுக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான பேச்சு வார்த்தை நடத்திட கூட்டுப் பணிக் குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையான தீர்வை எட்டிடவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.

மெட்ரோ ரெயில் திட்டங்கள்

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது வருத்தமளிக்கிறது. கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளதால், இத்திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது, அவற்றைவிடப் பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரிப்பதன் மூலம் மெட்ரோ ரெயில் திட்டத்திலும் தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகும் நிலையே காணப்படுகிறது.

இருமொழிக் கல்வி திட்டம்

மத்திய அரசின் கல்விக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட மும்மொழிப் பாடத்திட்டத்தை இந்த அரசு ஏற்கவில்லை. 1968-ம் ஆண்டு அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கல்வி திட்டத்தினை நாம் நமது இரு கண்களைப் போலக் காத்து வருகிறோம். நம் உயிரோடும், உணர்வோடும் கலந்துள்ள செந்தமிழைக் காப்பதில் சமரசம் என்றே பேச்சிற்கே இடமில்லை. எச்சூழ்நிலையிலும் இக்கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் இந்த அரசு ஏற்காது. தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கையை மறைமுக இந்தி மொழித் திணிப்பாக மட்டுமே இவ்வரசு கருதுவதோடு, இதனை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை இவ்வரசு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்