மணப்பாறை, புத்தூர், ஸ்ரீரங்கம் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

இரவு 7 மணிஅளவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்கிறார்.;

Update:2025-08-25 00:45 IST

திருச்சி,

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் பிரசாரத்தை தொடங்கினார்.

முதல்நாளான நேற்று முன்தினம் திருவெறும்பூர், காந்திமார்க்கெட் மரக்கடை, லால்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். 2-வது நாளான நேற்று காலை எடப்பாடி பழனிசாமி திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி பணிகள், சட்டமன்ற தேர்தல் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து, திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மாற்று கட்சியினர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். பின்னர் மாலை 4 மணிக்கு மேல் ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்று மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய இடங்களில் பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இந்தநிலையில் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை எடப்பாடி பழனிசாமி விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அதன்பிறகு சிறிது நேர ஓய்வுக்கு பின் அவர், மாலை 4 மணி அளவில் மணப்பாறையில் பிரசாரம் செய்கிறார். இதனை தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு திருச்சி மேற்கு தொகுதியில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 7 மணிஅளவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பும் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி திருச்சியில் 3 நாட்கள் பிரசாரம் செய்ததையொட்டி அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், பரஞ்சோதி, குமார் ஏற்பாட்டில் திருச்சி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பிரமாண்ட பதாகைகள் அமைத்தும், கொடி, தோரணங்கள் கட்டி வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்