எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் 17-ந்தேதி தொடக்கம்; அ.தி.மு.க. அறிவிப்பு
சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் செல்கிறார்.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சூழலில், கூட்டணி அமைப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதில், அ.தி.மு.க. சார்பாக, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் பற்றி அ.தி.மு.க. அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, வருகிற 17-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுபற்றி அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எடப்பாடி பழனிசாமி, 17-ந் தேதி தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், 18-ந் தேதி பாலக்கோடு, பென்னாகரம், 19-ந் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம், 20-ந் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர், 21-ந் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம், 23-ந் தேதி குன்னூர், உதகமண்டலம், 24-ந் தேதி கூடலூர், 25-ந் தேதி வேடசந்தூர், கரூர், 26-ந் தேதி அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எழுச்சி பயணத்தின்போது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.