தூத்துக்குடியில் இன்று கல்வி கடன் முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கடனைப் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வருமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.;

Update:2025-11-28 07:06 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ/ மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக மாவட்ட நிர்வாகம் வங்கியாளர்களை ஒருங்கிணைத்து கல்வி கடன் வழங்கும் முகாம் இன்று (28.11.2025) காலை 10 மணிக்கு சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

2024-2025-ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் இந்த கல்வி ஆண்டில் சேர்ந்திருக்கும் மாணவ, மாணவியர் மற்றும் ஏற்கனவே கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

மாணவர்கள் கல்வி கடனைப் பெற விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வருமாறு மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார். மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ் புக், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 10-ம் வகுப்பு, +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவையுள்ளவர்களுக்கு), உறுதிமொழி சான்றிதழ் (Bonafide Certificate), கல்லூரி கட்டண விவரம் மற்றும் செலுத்திய கட்டண ரசீதுகளை கொண்டு வர வேண்டும்.

இதேபோல இணை விண்ணப்பதாரராக வரும் பெற்றோர் அவர்களது பான் கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி கணக்கு பாஸ் புக் மற்றும் வருமானச் சான்றிதழை கொண்டு வர வேண்டும். மேலும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையத்தளத்திலும் கல்வி கடனுக்காக பதிவு செய்து கொள்ளலாம்.

மத்திய/ மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் போன்ற கட்டணங்களை இந்த கல்வி கடன் மூலம் பெறலாம். இந்த கல்வி கடன் முகாம், மாணவர்களின் உயர்கல்விக்கான கனவை நிறைவேற்றுவதில் சிறந்த வாய்ப்பாக அமையும் என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்