சென்னையில் வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.60 லட்சம் மோசடி - என்ஜினீயர் கைது

பொதுமக்களே ஸ்ரீவட்ஸ் வீட்டை முற்றுகையிட்டு, அவரை கையும், களவுமாக பிடித்து மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.;

Update:2025-11-09 06:56 IST

சென்னை,

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீவட்ஸ் (வயது 44). சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி உமாதேவி. ஸ்ரீவட்சுக்கு சொந்தமாக கெருகம்பாக்கம் மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி ஆகிய பகுதிகளில் 2 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை குத்தகைக்கு விடுவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார்.

இதனை நம்பிய பலர் ஸ்ரீவட்சை தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அளித்துள்ளனர். இதுபோல் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ரூ.60 லட்சம் வரை அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிய ஸ்ரீவட்ஸ், அவர்கள் யாருக்கும் வீட்டை குத்தகைக்கு விடாமல் ஏமாற்றி வந்தார்.

Advertising
Advertising

இதனால் சந்தேகம் அடைந்த பணம் கொடுத்தவர்கள், இதுபற்றி விசாரித்தபோதுதான் அந்த வீடுகள் அனைத்தும் வங்கி கடனில் இருப்பது தெரியவந்தது. இதனால் பணம் கொடுத்தவர்கள் ஸ்ரீவட்சை தேடி அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டை காலி செய்துவிட்டு கொழுமணிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருவது தெரிந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களே அங்கு சென்று, ஸ்ரீவட்ஸ் வீட்டை முற்றுகையிட்டு, அவரை கையும், களவுமாக பிடித்து மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

கும்பகோணத்தை சேர்ந்த ஸ்ரீவட்ஸ், சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். உடன் வேலை செய்த நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கினார். இதற்காக நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.1 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரது நண்பர்கள் ஸ்ரீவட்சை ஏமாற்றி விட்டனர்.

மேலும் மோசடி வழக்கிலும் அவரை போலீசில் மாட்டி விட்டுள்ளனர். இதனால் சிறை சென்ற ஸ்ரீவட்சுக்கு வேலை பறிபோனது. அதன்பிறகு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார். தனது நண்பர்களே தன்னை ஏமாற்றிவிட்டதால் தானும் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். அதன்படியே வங்கியில் கடன் பெற்று வாங்கிய 2 வீடுகளுக்கு சரியான தவணையை கட்ட முடியாததால் அவற்றை குத்தகைக்கு விடுவதாக விளம்பரம் செய்துள்ளார்.

அதனை நம்பி பலரும் பணம் கொடுத்ததால் அந்த பணத்தை கொண்டு வங்கி தவணையை கட்டி உள்ளார். மீதம் உள்ள பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்ந்துள்ளார் என்பதும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்