வேலை கிடைக்காத விரக்தியில் போதைப்பொருள் விற்பனையில் இறங்கிய என்ஜினீயர்கள்

4 பேரிடம் இருந்தும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update:2025-09-20 07:49 IST

சென்னை,

உலக அளவில் காணப்படும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவற்றை ஒழிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 30 கோடிக்கும் மேலானோர் போதைப்பொருட்களின் பிடியில் சிக்கி மீள முடியாமல் உள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்த நிலையில், சென்னையில் போதைப்பொருள் விற்ற 4 என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வேலை கிடைக்காத விரக்தியில் அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில், இரவு நேரத்தில் ஒரு கும்பல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு மாறுவேடத்தில் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் விலை உயர்ந்த போதைப்பொருளான மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட சூளைமேட்டை சேர்ந்த பாப்பிஸ்ட் (வயது 20), லாரன்ஸ் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஈரோட்டை சேர்ந்த டென்னீஸ் டிசோசா (20), ரெனீத் (22) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 4 பேரிடம் இருந்தும் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அனைவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆவர். வேலை கிடைக்காத நிலையில், போதைப்பொருள் விற்பனையில் அவர்கள் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்