ஈரோடு: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
ஈரோடு,
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதி 2-ஐ சேர்ந்தவர் பசும்பொன் பிரகாஷ். தே.மு.தி.க. கட்சியின் வட்ட செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி ஜஸ்விந்தராணி (வயது 42).
இவர் ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். ஜஸ்விந்தராணி நேற்று இரவு 8.30 மணி அளவில் ஈரோடு மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பினார்.
சென்னிமலை ரோட்டில் டீசல் செட் பகுதியை கடந்து தொழிற்பேட்டை அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் ஜஸ்விந்தராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அவர் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஜஸ்விந்தராணி இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.