சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி: பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
நட்சத்திரா கணக்கு பாடப்பிரிவில் 3 மதிப்பெண்கள் குறைந்து தேர்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது.;

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சிறுமொளசியை அடுத்த வேட்டுவ பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், விவசாயி. இவருடைய மனைவி தீபா. இவர்களுக்கு நட்சத்திரா (வயது 17) என்ற மகளும், சரவணன் (11) என்ற மகனும் இருந்தனர்.
திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நட்சத்திரா சி.பி.எஸ்.இ. பிளஸ்-2, சரவணன் 6-ம் வகுப்பு தோ்வு எழுதி இருந்தனர். மேலும் நட்சத்திரா பஞ்சாப்பில் உள்ள ஒரு கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு எழுதி இருந்தார். கடந்த 13-ந்தேதி சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் நட்சத்திரா கணக்கு பாடப்பிரிவில் 3 மதிப்பெண்கள் குறைந்து தேர்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்ட சரவணன் இது குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த அவர்கள் நட்சத்திராவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பின்னர் பல்வேறு மருத்துவ மனைகளில் தொடர் சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட நட்சத்திராவின் உடல் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் 2 கண்களை அவரது பெற்றோர் தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.