ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தந்தை, மகள் - ஈரோட்டில் பரபரப்பு
இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
கோப்புப்படம்
ஈரோடு,
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 35). துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி சூர்யா தனது குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு வருவதற்காக மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்து இருந்தார். அவர்கள் நேற்று முன்தினம் மதியம் ஈரோட்டுக்கு ரெயிலில் வந்து கொண்டு இருந்தனர். அந்த ரெயில் ஈரோடு அருகே சாவடிபாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது படிக்கட்டுக்கு அருகில் சூர்யா, அவரது மகள் நிவாஷினியுடன் (4) நின்றிருந்தார். எதிர்பாராதவிதமாக சூர்யாவும், நிவாஷினியும் படிக்கட்டில் இருந்து வெளியே தவறி விழுந்தனர்.
சூர்யா தனது மகளுடன் கீழே விழுந்ததை கவனித்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். சிறிது தூரத்தில் ரெயில் நின்றது. உடனடியாக அவர் ரெயிலில் இருந்து இறங்கி தனது கணவரை தேடி தண்டவாளத்தில் ஓடினார். அங்கு படுகாயத்துடன் கிடந்த சூர்யா, நிவாஷினி ஆகியோரை ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். .