எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.;

Update:2025-10-18 15:16 IST

கோப்புப்படம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஈரியூர் கிராமத்தில் எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ஈரியூர் கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி (58 வயது) மற்றும் அவரது மனைவி அனுசுயா (50 வயது) ஆகிய இருவரும் கடந்த 13-ந்தேதி இரவு சுமார் 11 மணியளவில் அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிவாயு பரவியிருந்த நிலையில் லைட்டர் பற்றவைத்தபோது திடீரென தீப்பிடித்து வீடு முழுவதும் சேதம் ஏற்பட்ட நிலையில் மேற்படி பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி அனுசுயா ஆகிய இருவருக்கும் பயங்கர தீக்காயம் ஏற்பட்டு உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் பொன்னுசாமி 16-ந்தேதி இரவு சுமார் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனுசுயா என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த பொன்னுசாமியின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்