கோவை சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங்

இன்னும் சில நாட்கள் அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற இருக்கிறார்;

Update:2025-11-05 20:21 IST

கோவை

கோவையில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவி மெல்ல, மெல்ல உடல்நிலை தேறி வருகிறார். அவரது உறவினர்கள் மற்றும் நர்சுகள் பக்கத்தில் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள். மேலும் மனநல மருத்துவர்களும் அடிக்கடி மாணவியை சந்தித்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறார்கள். பெண் போலீசார் சந்தித்து குற்றவாளிகளை பிடித்து விட்டதாகவும், தைரியமாக இருக்கும்படியும் ஆறுதல் கூறி அவர்களும் கவுன்சிலிங் அளித்து வருகிறார்கள். போலீசாரும், மனநல மருத்துவர்களும் அளிக்கும் கவுன்சிலிங் காரணமாக மாணவி படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறார்.

இன்னும் சில நாட்கள் அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற இருக்கிறார். அதன்பிறகு அவர் தங்கள் உறவினர்களுடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். மருத்துவர்கள், நர்சுகளை தவிர வேறு யாரும் மாணவியை நெருங்க முடியாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாணவி சிகிச்சை பெறும் அறைக்கு வெளியே 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் காதலனுக்கும் டாக்டர்கள் கவுன்சிலிங் கொடுத்து அவரை தேற்றி வருகிறார்கள். அரிவாளால் தாக்கப்பட்டதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், சென்று பாதிக்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பதிவு செய்தார். மேலும் காதலனிடமும் விசாரணை நடத்தி அதுவும் பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்