பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு
ஜன்னல் வழியாக சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.;
கோப்புப்படம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிகருப்பு (24 வயது). இவர் ஒரு வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருந்ததை அறிந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி, வீட்டுக்கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் ஜன்னல் வழியாக அந்த சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு கதவு மீது கல் எறிந்து சங்கிலிகருப்பு சத்தம் போட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த சிறுமி வீட்டிற்குள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் கழுத்தில் தூக்குப்போட்டதற்கான காயம் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சிறுமியின் தந்தை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ வழக்குப்பதிவு செய்து சங்கிலிகருப்புவை தேடி வருகிறார்கள்.