அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி: வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.;

Update:2025-07-05 06:41 IST

சென்னை,

தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலின்போது நிதி நிலையை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடைமுறை 27.4.2020 முதல் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அக்டோபர் 1-ந் தேதி முதல் 15 நாட்கள் வரையிலான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்து இருந்தால் அக்டோபர் 1-ந் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்து இருந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்தும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தால், 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்தும் ஈட்டிய சரண் விடுப்பைப் பெறுவதற்கு தகுதி உண்டு.

இதேபோன்று ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பணி நியமனம் பெற்றிருந்தால் அடுத்த ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலனை பெறலாம்.

2020-ம் ஆண்டு முதல் வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பணியில் சேருவோருக்கு மட்டுமே 3 மாத சுழற்சி முறையிலான ஈட்டிய சரண் விடுப்பு திட்டம் பொருந்தும். இந்த உத்தரவு உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்