அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகிறது ஜாக்பாட்!

பல பொருட்களை வாங்க பணம் இருக்கும் என்பதால் பொருட்களை வாங்கும் அளவு அதிகரிக்கும்.;

Update:2025-09-12 03:13 IST

‘அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம்’ என்று ஒரு வழக்குமொழி உண்டு. அரசு பணியில் மாதம் தவறாமல் சம்பளம், நிறைய விடுமுறை, வருடம் தப்பினாலும் தவறாத ஊதிய உயர்வு, திறமை இருக்கிறதோ, இல்லையோ காலத்தின் அடிப்படையில் பதவி உயர்வு, எல்லாவற்றுக்கும் மேலாக பணிநிறைவு பெற்றவுடன் மாதா மாதம் ஓய்வூதியம், ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு இருக்கும்போதே மரணம் அடைந்தால் அவரது வாழ்க்கை துணைவருக்கு அவருடைய காலம் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் என்று ஒரு அரசு ஊழியர் பணியில் சேர்ந்தது முதல் அவர் மரணம் அடைந்த பிறகும் அரசின் உதவிகள் கிடைக்கிறது.

இதுமட்டுமல்லாமல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை உயர்த்தி வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. அந்தவகையில், முதல் சம்பள கமிஷன் 1946-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தன் பரிந்துரைகளை 1947-ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. அப்போது முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு கடைசியாக 7-வது சம்பள கமிஷன் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால் 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்சுகளில் 23.55 சதவீத உயர்வு கிடைத்தது.

இந்த ஆண்டு மத்திய மந்திரிசபை கூட்டத்தில், 50 லட்சம் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும், 60 லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு மற்றும் அலவன்சுகளை திருத்தியமைக்க 8-வது சம்பள கமிஷன் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இப்போதைய நிலையில் மத்திய அரசாங்க பணியாளர்களின் எண்ணிக்கையைவிட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இந்த 8-வது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பு வெளியானதே தவிர, இதுவரை மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. ஆனால் எந்தநேரத்திலும், அதுகுறித்த அரசிதழ் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. அப்படி வெளியானதும், இந்த கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். ராணுவ அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர்நலன் மற்றும் பயிற்சித்துறை மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசாங்கங்களிடமும் இந்த சம்பள கமிஷன் குறித்து மத்திய அரசாங்கத்தால் கருத்து கேட்கப்படும்.

அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள், ஆலோசனைகளை கேட்டபின் தன் அறிக்கையை தயார்செய்ய ஒரு ஆண்டுகாலம் அவகாசம் அளிக்கப்படும். இந்த 8-வது சம்பள கமிஷனின் பரிந்துரையை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டபின், மாநில அரசும் ஊதிய நிர்ணயக்குழுவை அமைத்து, அதற்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கு அதுபோல சம்பளம் மற்றும் அலவன்சு உயர்வுகளை வழங்கும். இதுமட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இதன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கும். இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும். ஆனால் சம்பள உயர்வு காரணமாக அவர்களின் கைகளில் பல பொருட்களை வாங்க பணம் இருக்கும் என்பதால் பொருட்களை வாங்கும் அளவு அதிகரிக்கும். இதனால் வர்த்தகம் தழைக்கும். என்றாலும் விலைவாசி உயரவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த 8-வது சம்பள கமிஷன் ஜாக்பாட்டை பொழிந்தாலும், அரசு ஊழியர்கள் அல்லாத பொதுமக்களையும் கருத்தில்கொண்டு ஏதாவது செய்யவேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்