நெல்லையில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு; அமித்ஷா பங்கேற்பு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது;
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று நெல்லை வந்துள்ளார். அவர் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தமிழக சட்டசபை தேர்தல், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
முன்னதாக, கேரளாவின் கொச்சியில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு சென்றார். அங்கிருந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் சென்றார்.
நையினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற அமித்ஷா, பின்னர் அங்கிருந்து வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டிற்கு சென்றார். இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். அமித்ஷா தலைமையில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.