100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை கண்டிக்கிறேன் - செல்வப்பெருந்தகை

வரலாற்று திரிபுவாத முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.;

Update:2025-12-13 13:31 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மன்மோகன்சிங் தலைமையில் 2004-ம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது.

ஓராண்டில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற நோக்கம் கொண்டது இத்திட்டம். இத்திட்டத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற பெண்களும், பட்டியலின மக்களும் உறுதியான ஊதியத்தினால் வறுமையிலிருந்து வெளியேறுகிற வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போதுமான நிதியை ஒதுக்கியதால் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றிய புரட்சிகரத் திட்டம் என பாராட்டப் பெற்றது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டியவர் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் குழு தலைவராக இருந்த சோனியா காந்தி.

கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்வதற்கு வருகிற மக்களவை கூட்டத் தொடரில் மத்திய பா.ஜ.க. அரசு மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக செய்தி வெளிவந்திருக்கிறது. மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி பல நேரங்களில் காந்தியடிகளை புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாலும் மகாத்மா காந்தியின் புகழை சிதைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலினால் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த மக்களவை கூட்டத்தொடரின்போது இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற காரணத்தால் நவஇந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பா.ஜ.க. தலைவர்கள் இழிவுபடுத்தி பேசினார்கள். இதற்கு நேரு பாரம்பரிய பெருமையை காப்பாற்றுவதில் முன்னணிப் பங்கு வகித்து வருகிற பிரியங்கா காந்தி அவர்கள் மக்களவையில் உரையாற்றும்போது இதை கடுமையாக விமர்சித்து பா.ஜ.க.வினரின் அவதூறுகளை முறியடித்தார். நேரு அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமித்ஷா உள்ளிட்டவர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்து தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் அவரது சீடராகவும், நம்பிக்கைக்குரியவருமாக இருந்த வல்லபாய் படேலுக்கு 670 அடி உயரத்தில் ரூபாய் 3,000 கோடி செலவில் சிலை வைத்து தங்களது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மகாத்மா காந்தி படுகொலையின்போது அதில் சம்மந்தப்பட்டதாகக் கருதப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அன்று தடை செய்தவர்தான் அன்றைய உள்துறை மந்திரியான வல்லபாய் படேல். அவருக்கு சிலை வைத்ததினால் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் வகுப்புவாத அடையாளங்கள் மறையவில்லை. ஆர்.எஸ்.எஸ். ஒரு நச்சு இயக்கம் என்பதை எவராலும் மூடி மறைக்க முடியாது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரை இழிவுபடுத்துவதினால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா போன்றவர்களின் அரசியல் தரம் தாழ்கிறதே தவிர, அதனால் வேறு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.

மகாத்மா காந்தி பெயரில் இருக்கிற இத்திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தேசத்தின் தந்தையின் பெயரைவிட இத்திட்டத்திற்கு வேறு எந்த பெயர் பொருத்தமாக இருக்க முடியும்? நீங்கள் வைக்கப் போகிற புதிய பெயரை வேறு ஏதாவது ஒரு திட்டத்திற்கு நீங்கள் வைக்கலாம். ஆனால், உங்களது நோக்கம் மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் புகழை வரலாற்றில் இருந்து அழிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு நீங்கள் செயல்படுவீர்களேயானால் உங்களை இந்திய நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். இதனால் காந்தி, நேருவின் புகழை எவராலும் அழிக்க முடியாது. ஆனால், இத்தகைய வரலாற்று திரிபுவாத முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறாது.

‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்" என்கிற வள்ளுவரின் வரிகளை பா.ஜ.க.வினக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பா.ஜ.க.வுக்கு இறுதி அத்தியாயம் தொடங்கி விட்டதால் இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற செயல்களினால்தான் பா.ஜ.க.வின் தரம் தாழ்ந்த அரசியல் வெளிப்படுகிறது. எனவே, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளினால் ஏற்படுகிற விளைவுகளுக்கு பா.ஜ.க. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்