தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட பெயர் மாற்றம்; காந்தி மீதான வெறுப்பின் உச்சம்: விவசாய தொழிலாளர் சங்கம் அறிக்கை

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களை ஆண்டுக்கு 200 ஆகவும், தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.700 ஆக நிர்ணயித்து வழங் வேண்டும்.;

Update:2025-12-13 12:57 IST

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அ.பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் மீதான வெறுப்பின் உச்சமாகும். நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியான இடதுசாரி கட்சிகளின் முன் முயற்சியால், ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு, 2005-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில், உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்று இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள், கிராமத் தொழிலாளர் குடும்பங்கள் தலா ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவது சட்டப்பூர்வ உரிமையாக வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த முன்னோடி திட்டத்திற்கு தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயர் சூட்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் மற்றும் திட்டப்பணிகள் மூலம் ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இருபதாண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரில் உள்ள “மகாத்மா காந்தி” பெயரை நீக்கி விட்டு, சாது “பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா” என பெயரை மாற்றுவது என, பாஜக ஒன்றிய அரசு நேற்று (12.12.2025) முடிவு எடுத்திருப்பதை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கடுமையாக ஆட்சேபிக்கிறது, எதிர்க்கிறது.

தேச விடுதலைப் போராட்டத்தின் தலைவராக விளங்கிய மகாத்மா காந்தியை நாடு “தேசத்தந்தை” என்று நாடு போற்றிப் பாராட்டி வருகிறது. அவர் பின்பற்றிய மதச்சார்பற்ற கொள்கையும், அகிம்சா வழி முறையும் உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஆனால் பெரும்பான்மை மத அடிப்படைவாதக் கொள்கையில், மதவெறியோடு செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் தாய் வழி அமைப்பான இந்து மகா சபையும் மகாத்மா காந்தியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாடறியும்.

“ஈஸ்வர் அல்லா நாம், சப்கோ சன் மதி தே பகவான்” அனைத்து சமயங்களையும், சமமாக மதித்து, மக்கள் ஒற்றுமைக்கு வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணல் மகாத்மா காந்தி, இந்து மதவெறி சக்திகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதன் துயர வடு என்றென்றும் மாறாது. பாஜக தலைமையிலான அரசு அமைந்த காலத்தில் இருந்து, கடந்த 11 வருடங்களாக சவார்க்கர், நாதுராம் கோட்சே போன்றவர்களுக்கு நற்சான்று வழங்கி, அவர்களை நாட்டின் தலைவர்களாக முன்னிறுத்தும் வரலாற்றுப் புரட்டில் சங் பரிவார் கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கையும் அமைந்துள்ளது.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஆரம்ப நாளிலிருந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைத்து, அதன் திட்டப்பணிகளை சிதைத்து வரும் பாஜக ஒன்றிய அரசு, இன்று அதன் பெயரில் மாற்றம் செய்து, முற்றிலும் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. “மகாத்மா காந்தி” பெயரில் பாஜக ஒன்றிய அரசு நடத்தும் வன்மம் மிகுந்த தாக்குதலை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரை மாற்றும் திட்டத்தை கைவிடவும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களை ஆண்டுக்கு 200 ஆகவும், தினசரி குறைந்தபட்ச ஊதியம் ரூ.700 ஆக நிர்ணயித்து வழங்கவும் வேண்டும் என ஒன்றிய அரசையும், பிரதமரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்