நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல...விஜய் மீது உதயநிதி விமர்சனம்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.;
சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து, 'உங்கள் விஜய் நான் வரேன்' எனக் குறிப்பிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.தனது பரப்புரையை கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கிய அவர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார். இதன்படி கடந்த இரண்டு வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தினார். அந்த வகையில் நாளை (27ஆம் தேதி சனிக்கிழமை) நாமக்கல் மாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் அவர் பரப்புரை செய்ய உள்ளார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய், சனிக்கிழமை மட்டுமே வெளியே வருகிறார். மற்ற நாட்களில் ஏன் வெளியே வருவதில்லை? என விமர்சனங்கள் வந்தன. இதற்கு விளக்கமளித்த விஜய், மக்களை சந்திக்க வரும்போது அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் சனிக்கிழமை பயணத்தை மேற்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதன்படி,
நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல...வாரத்தில் 4-5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். ஞாயிற்றுக்கிழமை கூட சுத்திட்டுதான் இருப்பேன் என்று விஜய் பெயரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.