நீர்வரத்து அதிகரிப்பு: அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்
கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் அமராவதி அணை. இந்த அணை உடுமலைைய அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. தூவானம் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.அதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரவு பகலாக நீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அணையின் நீர் இருப்பு 87 அடியை கடந்ததை தொடர்ந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த சூழலில் நேற்று காலை 7.30 மணியளவில் அணைக்கு திடீரென 7 ஆயிரத்து 500 கன அடி நீர்வரத்து ஏற்பட்டது.இதனால் நீர் இருப்பு 88 அடியை நெருங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் உள்ள 9 கண் மதகுகளில் 4 மதகுகள், ஷட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.மேலும் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், ஆற்றுக்குள் கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.