மதுரையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? - கலெக்டர் பதில்

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் என்பது மதுரை மாநகரின் வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டுச் செல்கிறது.;

Update:2025-10-21 20:05 IST

மதுரை,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை என்பது பெய்து வந்தது. இதனிடையே மதுரை உட்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 5 மணி முதல் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் மழையின் அளவு படிப்படியாக உயர்ந்து தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மதுரை மாநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம், கோரிப்பாளையம், சிம்மக்கல்,தெப்பக்குளம், ரேஸ்கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ., காலனி, காமராஜர் சாலை, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும் திருமங்கலம், மேலூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

அதிகாலையில்பிருந்தே பெய்து வரும் மழையின் காரணமாக சாலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்று வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் என்பது மதுரை மாநகரின் வைகையாற்றின் இரு கரையும் புரண்டு ஓடுகிறது.

இந்தநிலையில், கனமழையை தொடர்ந்து மதுரையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? என்ற கேள்விக்கு மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் பதில் அளித்துள்ளார். அதில், காலை மழையின் அளவை பொறுத்து தான் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்