திமுக - தவெக இடையே போட்டியா? விஜய் கூறியது மக்களின் கருத்து அல்ல - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்று தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார்.;

Update:2025-09-21 19:26 IST

சேலம்,

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். ஏனென்றால், தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் வரை என ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.

தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும், பாஜக-வை தனது கொள்கை எதிரி என்றும் கூறி வரும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாடு முதல் தற்போதைய தேர்தல் பரப்புரையிலும் செல்லும் இடமெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - தவெகவிற்கும்தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார். இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த அரை நூற்றாண்டுகளாக திமுக - அதிமுக தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். திமுக-விற்கும், அதிமுக-விற்கும் இடையேதான் போட்டி நிலவி வருகின்றனர். பாமக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் என தமிழ்நாட்டின் பெரிய கட்சிகள் அனைத்தும் கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருகின்றனர். இவர்கள் கூட்டணிக்கு கடந்த காலங்களில் முக்கிய ஆதரவு அளித்தாலும், கூட்டணிக்கு திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தலைமை தாங்கி வருகின்றனர்.

ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் செல்லுமிடம் எல்லாம் திமுக - தவெகதான் போட்டி என்று திரும்ப திரும்ப கூறி வருவது அதிமுக-விற்கு பின்னடைவை உண்டாக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இந்த கட்சியின் தூண்களாகவும், இரட்டை இலை சின்னம் இவர்களின் பலமாக இருந்தாலும் தற்போதைய அதிமுக தலைமை, அதிமுக-விற்குள் நடக்கும் உட்கட்சி பூசல் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் வேதனையை உண்டாக்கியுள்ளது. இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை பலமாக வலுப்படுத்தி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த சூழலில், விஜய் செல்லுமிடம் எல்லாம் திமுக- தவெக இடையேதான் போட்டி என்ற கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாக பதித்து வருகிறார். விஜய்யின் இந்த கருத்தை அதிமுக உடைக்காவிட்டால் அதிமுக-விற்கு பெரும் சிக்கல் உண்டாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார். 2026 தேர்தலில் திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது என சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்