கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: தலைவர்கள் இரங்கல்
மு.க.முத்துவின் மறைவுக்கு திமுகவினரும், பல்வேறு கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
சென்னை,
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் மு.கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.
அவர் அணையா விளக்கு. பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில், பிள்ளையோ பிள்ளை படம் அவருடைய தந்தை கருணாநிதி கைவண்ணத்தில் உருவானது. கலைவாரிசாக மு.க. முத்துவை முன்னிறுத்த கருணாநிதி முயன்றார். ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர், பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. அரசியல் பணிகளிலும் விருப்பம் இல்லாமல் ஒதுங்கி கொண்டார்.
தற்போது சென்னை ஈச்சம்பாக்கத்தில் மு.க.முத்துவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.முத்துவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவு காரணமாக திமுகவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்து காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மு.க.முத்துவின் மறைவுக்கு திமுகவினரும், பல்வேறு கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.
தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து அவர்கள்.
நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.
பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு இரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள்.
பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.
என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.
----
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த மு. கருணாநிதி அவர்களுடைய மூத்த மகன் மு.க. முத்து அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் மு.க. முத்து அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
------
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் - தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து அவர்கள் 77வது வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.
தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.கழக மேடைகளில் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.
இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மு.க.முத்து அவர்களின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
------
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரு மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
திரு. மு.க. முத்து அவர்கள் தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் திரு. மு.க. முத்து அவர்கள். பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.
அவரது மறைவு அவரது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி,மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் முதல்-அமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
--------
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும் திரைப்பட நடிகருமான மு.க. முத்து அவர்கள் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
------
திராவிடர் கழக தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
தி.மு.க. தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க. முத்து அவர்கள் (வயது 77) இன்று (19.7.2025) காலை மறைவுற்றார் என்ற செய்தி பெரிதும் வருத்தத்திற்குரியதாகும்.
'தமிழரெல்லாம் மானத்துடன் வாழ்வதற்கு யார் காரணம்?.. பெரியார் காரணம்" என்று அவர் பாடிய பாடல் புகழ் பெற்ற ஒன்றாகும். கழகக் கூட்டங்களில் எல்லாம் ஒலி பரப்பப்படுவது வாடிக்கையாகும்.
புகழ் பெற்ற பாடகர் சிதம்பரம் செயராமனின் இசை வாரிசு என்று சொல்லத்தக்க வகையில் பேசப்பட்டவர். நமது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சகோதரரும் ஆவார்.
திரைப்படத்துறையிலும் மு.க.முத்து அவர்கள் பயணித்தவர். அவர்தம் பிரிவால் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
----
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து (77) இன்று (19.07 2075) சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.
கடந்த 1948 ஜனவரி 14 ஆம் தேதி பிறந்த மு.க.முத்து, தனது 20 வயதில் தாயை இழந்து விட்ட நிலையில், சின்ன அன்னை தயாளு அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். கலைஞரின் அரசியல் பணிக்கு பக்கபலமாக திகழ்ந்தவர்.
திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். அவரது இளவலும், இன்றைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வளர்ச்சி கண்டு மகிழ்வும், பெருமிதமும் அடைந்தவர். சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்.
மு.க.முத்துவிற்கு, அவரது வாழ்விணையர் சிவகாமி சுந்தரி, மகன் எம்.கே.எம்.அறிவுமதி ஆகியோர் உள்ளனர்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
------
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயரமுற்றேன். தந்தையைப் போலத் திரைத் துறையில் தடம் பதித்தவர். அவரை பிரிந்து வாடும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.