கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update:2025-09-28 00:56 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று இரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.

இதற்கிடையே, விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த நிலையில், முதற்கட்டமாக போலீசார் கொலையாகாத மரணம், மரணம் விளைவிக்கும் செயல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்கு மாவட்ட செயலா மதியழகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கரூரில் இருந்து சென்னை திரும்பிய தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்