குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு
நகையை பறித்த மர்மநபர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.;
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் காந்திமதி (வயது70). இவர் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று நாகர்கோவில் நேசமணி நகரில் உள்ள ஒரு ஆலயத்திற்கு வந்தார். ஆலயத்தில் பிரார்த்தனை முடித்த பிறகு வீடு திரும்புவதற்காக ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. டெரிக் சந்திப்பு சாலையில் பஸ் வந்த போது, காந்திமதி அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அழுது கொண்டே கூச்சலிட்டார்.
உடனே டிரைவர் கலெக்டர் அலுவலகம் முன்பு பஸ்சை நிறுத்தினார். இதுபற்றி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார் பஸ் முழுவதும் நகையை தேடினர். ஆனால் நகை கிடைக்கவில்லை.
பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் மூதாட்டியிடம் இருந்து நகையை பறித்ததாக தெரிகிறது. நகையை பறித்த மர்மநபர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.