விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம்; அமைச்சர் துரைமுருகன்
நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும் என்று துரைமுருகன் கூறினார்.;
வேலூர்,
வேலூர், காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆனது குறித்து...
பதில்: தமிழர் என்பது மட்டும் அல்ல, அவர் எனக்கு வேண்டிய நண்பர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க.வை பார்த்தவர் நீங்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து...
பதில்: அ.தி.மு.க. நிலை குறித்து நான் என்ன சொல்வது. அது அவர்கள் கட்சி. அந்த கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.
கேள்வி: தாமிரபரணி ஆற்றை தி.மு.க. தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் பேசி இருக்கிறாரே?.
பதில்: நயினார் பாவம். புது பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டசபையில் எப்படி செயல்படுகிறார் என எங்களுக்கு தெரியும்.
கேள்வி: த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து...
பதில்: நடிகர் விஜய் முதலில் வெளியே வரட்டும் பார்க்கலாம். அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன?, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன?. இவ்வாறு அவர் கூறினார்.