திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.;
திருச்சி,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மருதாநல்லூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 47). இவர் கடந்த 2022-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து அவரை 2023-ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைத்து இருந்தனர். வழக்கமாக ஆயுள் தண்டனை கைதிகளை சிறைச்சாலையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவார்கள். அந்த வகையில் ராஜேந்திரன் உள்பட 5 கைதிகளை நேற்று அதிகாலை 5.50 மணி அளவில் மத்திய சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்து சிறைச்சாலையின் நுழைவு வாயில் முன்பு உள்ள கேண்டீனில் வேலைக்கு அனுப்பினர். அங்கு ராஜேந்திரன் சமையல் உதவியாளராக பணி செய்து வந்தார்.
இதனை தொடர்ந்து காலை 8.30 மணி அளவில் வேலைக்கு சென்ற கைதிகளின் விவரத்தை கணக்கெடுத்தபோது, ராஜேந்திரன் மட்டும் அங்கு இல்லை. அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. உடனே சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறை நிர்வாகம் தரப்பில் கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கைதி ராஜேந்திரனை தஞ்சையில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தீவிரமாக தேடி வருகிறார்கள். திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.