வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதால் கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற லாரி கிளீனர்
கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார்.;
திருப்பூர்,
திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40). இவர், தனியார் கழிவு நீர் அகற்றும் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து இளங்கோவன் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் தங்கி இருந்த மாது (35) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையொட்டி அந்த பெண்ணை, இளங்கோவன் தான் குடியிருக்கும் வீட்டுக்கு அழைத்து சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இதற்கிடையே மாது அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவரிடம் பேசி வந்ததாக தெரிகிறது. இது இளங்கோவனுக்கு பிடிக்கவில்லை.
இதனால் மாதுவுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக கூறி, இளங்கோவன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி இரவு மாதுவை வீட்டிற்கு இளங்கோவன் அழைத்து சென்று தனிமையில் இருந்தார். அதன்பின்னர் செல்போனில் யாரிடம் பேசுகிறாய்? என கேட்டு தகராறு செய்தார். இதனால் 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன், வீட்டில் வைத்திருந்த சிறிய குழவிக்கல்லை எடுத்து மாதுவின் முகத்தில் பலமுறை குத்தி, வாய், மூக்கு மற்றும் பற்களை உடைத்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி, தரையில் விழுந்த மாதுவை அப்படியே விட்டுவிட்டு இளங்கோவன் வெளியே சென்றார். அதன்பிறகு மறுநாள் காலையில் வந்து பார்த்த போது மூச்சு, பேச்சு இல்லாமல் மாது கிடந்தார்.
இதனையடுத்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார். அங்கு முகம் சிதைந்த நிலையில் மாதுவை கண்ட டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாதுவை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து இளங்கோவனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், மாது செல்போனில் நீண்ட நேரம் வேறு ஒருவருடன் பேசியதால் அவரை குழவிக்கல்லால் முகத்தை தாக்கி சிதைத்ததாகவும், இதனால் முகம், பற்கள் உடைந்த நிலையில் அங்கிருந்து சென்று விட்டதாகவும், மறுநாள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று அழைத்து வந்தபோது, அவர் இறந்து விட்டாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.