திருச்செந்தூர் கடலில் நீராடியபோது அலையில் சிக்கி கால் முறிவு - கவனமாக கடலில் நீராட அறிவுறுத்தல்
கடலில் நீராடியபோது அலையில் சிக்கி 5 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோவிலில் ஆவணித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதேபோல் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா, நேற்று கோகுலாஷ்டமி, இன்று ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கோவிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டத்தினால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து வழிகளும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
5 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நீண்டநேரம் காத்திருந்ததால் சிலர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர் விடுமுறையால் கோவில் வளாகம், கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். அப்போது கடலில் குளித்த பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டான்.
இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டனர். இதைக்கேட்டு ஓடிவந்த கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் சிறுவனை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் கடலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நீராடிக்கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்கிய சாத்தூரை சேர்ந்த மாரிசாமி (47), திண்டிவனத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (55), சிவகங்கையை சேர்ந்த ராஜேஸ்வரி (69), கமுதியை சேர்ந்த அன்னலட்சுமி (45), மதுரையை சேர்ந்த ஆனந்தவல்லி (52) ஆகிய 5 பக்தர்கள் அடுத்தடுத்து பாறைகளில் மோதி கால் முறிவு ஏற்பட்டதால் படுகாயமடைந்தனர்.
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 5 பேரையும் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து பக்தர்கள் அலையில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் கடலில் குளிக்கும் போது அலை இழுத்துச் சென்று பாறைகளில் மோதி, பலருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து. அங்கு கவனமாக நீராட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை ஒட்டி சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.