மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 117.3 அடியாக உயர்ந்துள்ளது.;

Update:2025-06-28 15:52 IST

சேலம்,

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக கூடிக்கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 290 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேட்டூர் அணையின் உயரம் 120 அடியாகும். இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து தற்போது 117.3 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டினால் அணையில் இருந்து வினாடிக்கு 60,000 முதல் 75,000 கனஅடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்