சென்னையில் 15-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில், சாலை மறியலில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என அறிவித்தனர். அதன்படி, சென்னை எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலத்தில் நேற்று 14-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக வந்தனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும், அரசுக்கும் எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.பின்னர் அவர்கள், காந்தி இர்வின் மேம்பால சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, எழும்பூர் ரெயில் நிலையம், அண்ணாசாலை செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இந்த போராட்டம் காரணமாக மாற்று வழிகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு ஆசிரியர்கள் சாலை மறியலை கைவிட்டு மேம்பாலத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன்காரணமாக 10-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலர், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைதான ஆசிரியர்கள் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்ட நிலையில், மாலையில் விடுவிக்கப்பட்டனர். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஆனால், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்தனர். ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 15-வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக அண்ணாசாலை நோக்கி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.