கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த குரங்கு.. பாட்டியின் உணவை பங்குப்போட்ட சாப்பிட்ட காட்சிகள் வைரல்

சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் தட்டில் இருந்த சப்பாத்தியை பிடுங்கி ருசித்து சாப்பிட்டது.;

Update:2025-11-13 07:56 IST


கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீக்கடையும், சிறுதானிய உணவகமும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் காட்டில் இருந்து மாநகரத்திற்குள் விசிட் அடித்த குரங்கு நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்தது.

பின்னர் அந்த குரங்கு சிறுதானிய உணவகம் பகுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் தட்டில் இருந்த சப்பாத்தியை பிடுங்கி ருசித்து சாப்பிட்டது. இந்த காட்சியை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர். சிலர் குரங்கை கண்டு அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த குரங்கு அங்கிருந்த குப்பை தொட்டியில் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று தேடியது. அப்போது ஒருசிலர் குரங்கை துரத்த அதன் அருகே சென்றனர். அவர்களை நோக்கி ஆக்ரோஷத்துடன் சென்று, துரத்தியது. இதனால் பலர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து குரங்கை பிடிக்க வனத்துறையினரால் கூண்டு கொண்டு வரப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டது. அந்த கூண்டில் குரங்கை கவரும் வகையில் சில கொய்யா பழங்கள் வைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்து குரங்கு அட்டகாசம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்