கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் கொலை: அண்ணன், தம்பி கைது

உடன்குடி அருகே தேரியூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை, 2 பேர் சேர்ந்து வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.;

Update:2025-12-11 18:35 IST

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தாங்கைகயிலாசபுரத்தை சேர்ந்த சந்தோஷம் மகன் வேல்குமார் (வயது 27), கூலி தொழிலாளி. இவருக்கும் உடன்குடி, தேரியூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மகன் புனிதராஜ்(எ) செல்வத்திற்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேரியூர் திசையன்விளை சாலையில் இசக்கியம்மன் கோவில் அருகில் வேல்குமார் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை புனிதராஜ், அவரது அண்ணன் நாகராஜ்(28) ஆகிய 2 பேரும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த வேல்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர். நேற்று அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் புனிதராஜ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

"எனக்கும் வேல்குமார் அக்காவுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதை அறிந்த அவருக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதத்தில் நானும் எனது அண்ணன் நாகராஜும் சேர்ந்து தேரியூரில் நாகராஜ் என்பவரின் ஒர்க்‌ஷாப் அருகே அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினோம். அங்கிருந்து தப்பி ஓடிய எங்களை போலீசார் கைது செய்துள்ளனர்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்