நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
சுத்திகரிப்பு குடிநீர் வினியோகத்தின்போது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.;
கோப்புப்படம்
நெல்லை மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனீஸ்வரன் (28 வயது). மினி வேன் டிரைவர். இவருடைய மனைவி சாவித்திரி (24 வயது). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. முனீஸ்வரன் தனியார் சுத்திகரிப்பு குடிநீர் வினியோகம் செய்யும் கம்பெனியில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் துலுக்கர்பட்டி பகுதியில் உள்ள ஜெசிகா என்பவரது வீட்டில் குடிநீர் வினியோகம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இணைப்பை துண்டிக்காமல் மின்மோட்டாரின் ஒயரை தொட்டுள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கழுகுமலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.