‘கியூஆர்-கோடு' மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம்

சென்னை கோட்ட ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்-கோடு' மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-11-13 06:50 IST

சென்னை,

சென்னை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உணவகங்களிலும் குறைகளை பதிவு செய்யும் வகையில் முதன் முறையாக ‘கியூஆர்-கோடு' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரெயில்வே கோட்டம், ரெயில் மதத் செயலியுடன் இணைந்து ‘கியூஆர்-கோடு' புகார் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கியூஆர்-கோடு வசதியில் புகார்கள் அல்லது உணவகங்கள் குறித்த கருத்துகளை பயணிகள் பதிவு செய்யலாம். உணவகங்களில் அதிக கட்டணம், சேவைக் குறைபாடு, உணவின் தரம், அளவு, உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காதது, சுகாதார நிலை குறித்த விவரங்களை இதில் பதிவிடலாம். உணவக கியூ ஆர்-கோடை பயணிகள் செல்போனில் ஸ்கேன் செய்யலாம். அதில் உணவக இருப்பிடம், நிலையக்குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும்.

அத்துடன் இந்திய ரெயில்வேயின் பயணிகள் குறை தீர்ப்பு செயலியான ரெயில் மதத் வசதிக்குள் தானாகவே உள்நுழையும். அதில் தங்களது செல்போன் எண்ணைக் குறிப்பிட்டதும், குறுஞ்செய்தி (ஓ.டி.பி.) வரும். அதன்பின், புகாரின் வகையைத் தேர்ந்தெடுத்து, ஒரு சுருக்கமான விளக்கத்தை அளித்து சமர்ப்பிக்கலாம்.

பின்னர், ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன் கூடிய ஒப்புகைச் செய்தி, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு உடனடியாக அனுப்பப்படும். இதையடுத்து, புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்