சிக்கன் சாப்பிட மறுத்த காதல் மனைவி... புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
வெள்ளகோவில் குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்தனர்.;
சென்னை,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர் அங்கு பர்னிச்சர் கடையில் வேலை செய்த போது தன்னுடன் வேலை செய்து வந்த சுபலட்சுமி (25) என்பவரை காதலித்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் மேனகா அவருடைய கணவர் இருவரும் ஒரு கோவில் விசேஷத்திற்காக திருச்சி சென்று விட்டனர். வீட்டில் இருந்த மணிகண்டன் கடையில் சிக்கன் வாங்கி வந்து தனது மனைவியை சாப்பிட சொல்லி உள்ளார். அவர், தனது சகோதரி கோவிலுக்கு சென்று இருப்பதால் வீட்டில் சிக்கன் சாப்பிட மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
இதையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவி சிக்கன் சாப்பிட மறுத்ததால் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.