மத்திய அரசு கொண்டு வந்த தொகுப்புச் சட்டங்கள் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது - செல்வப்பெருந்தகை

புதிய தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-22 15:56 IST

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

நடைமுறையில் உள்ள 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது. இவை சட்டங்களின் தொகுப்பல்ல, ஒவ்வொன்றும் பல சட்டங்களை ஒன்றாக தொகுக்கப்பட்ட சட்டமாகும். இவற்றை தொகுப்பு சட்டம் என்று குறிப்பிடுவது தான் சரியாக இருக்கும். 2019 ஆம் ஆண்டிலேயே 4 தொழிலாளர் சட்டங்கள் தொகுக்கப்பட்டு ஒரே சட்டமாக்கப்பட்டு ஊதிய தொகுப்புச்சட்டம் - 2019 என்று அழைக்கப்படுகிறது. மற்ற 3 தொகுப்புச் சட்டங்களும் நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. அதேபோல, தொழில் உறவுகள் தொகுப்புச் சட்டங்கள் 3 சட்டங்களையும், சமூக பாதுகாப்பு தொகுப்புச் சட்டம் 9 சட்டங்களையும், பணி பாதுகாப்பு தொகுப்புச் சட்டத்தில் 13 தொழிலாளர் சட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் இந்த 4 தொகுப்புச் சட்டங்களுக்கும் ஒன்றிய அரசு விதிகளை உருவாக்கி அறிவித்து விட்டது.

தொழிலாளர் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளும் விதிகளை உருவாக்கி அறிவித்துள்ளன. இது நடைமுறைக்கு வருவதாக தற்போது மோடி அரசு அறிவித்துள்ளது. இது வெறும் தொகுப்புச் சட்டமல்ல. தொழிலாளர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி பெற்ற உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளது. ஏற்கனவே உள்ள சட்டப் பாதுகாப்புகளை நீர்த்துப் போகச் செய்கிறது.தொழிலாளர்களின் உரிமைப் பறிப்பு எனில் அதன் நோக்கம் முதலாளிகளின் செல்வக் குவிப்பே ஆகும்.

மத்திய பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, நரேந்திர மோடியின் கார்ப்பரேட் நண்பர்களான அதானி, அம்பானி போன்றவர்களுக்கு சாதகமாக இத்தகைய தொகுப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி என்பது கார்ப்பரேட்களுக்கு ஆதரவான ஆட்சியே தவிர, உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவான ஆட்சி அல்ல என்பதைத் தான் இந்த தொகுப்புச் சட்ட அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் 44 சட்டங்களில் 15 சட்டங்களை முழுமையாக ரத்து செய்து விட்டு, 29 சட்டங்களாக திருத்தி அதை நான்கு சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு சட்டங்களை நிறைவேற்றியது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைத்த அந்த சட்டங்களை திடீரென நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த சட்ட தொகுப்பை பொறுத்தவரை தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு மறுக்கப்படுகிறது. சில வாரங்களோ, சில மாதங்களோ வேலைக்கு வைத்து விட்டு எந்த நேரத்திலும் காரண, காரியமில்லாமல் வேலையிலிருந்து நீக்குவதற்கு இச்சட்டங்களில் வாய்ப்பு நிறைய இருக்கிறது. தொழிலாளர்கள் சங்கம் அமைக்கிற உரிமை மறுக்கப்படுகிறது. 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தற்போது விதிமுறை குறைந்தபட்சம் 300 தொழிலாளர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒன்றிய அல்லது மாநில அரசாங்கங்களால் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும் போது பணிநீக்கம் அதிகரிக்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொழிற்சங்கங்களின் வேலை நேரத்தை 9 முதல் 12 மணி நேரமாகவும், கடைகள் மற்றும் நிறுவனங்களின் வேலை நேரத்தை 9 மணி முதல் 10 மணி நேரமாகவும் இச்சட்டத் தொகுப்பு அதிகரிக்கிறது.

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தும் உரிமைகள் இதில் பறிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் அதை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் வேலை நிறுத்தம் செய்கிற உரிமை மறுக்கப்படுகிறது. பெரும்பாலான ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக குறிப்பிட்ட கால வரம்பிற்கு பணியாற்றுகிற வகையில் சூழ்நிலை உருவாகும். ஒப்பந்த தொழிலாளர்களாக வேலையில் அமர்த்தப்பட்டு அவர்களுடைய ஊதியம் பெருமளவு பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் நினைத்த நேரத்தில் உற்பத்தியை நிறுத்துவதற்கும், பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் இந்த சட்டத் தொகுப்பு பெரும் உதவியாக இருக்கிறது. மத்திய அரசின் சட்டத் தொகுப்பு அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு தான் பொருந்துமே தவிர, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொருந்தாது. 2024 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி மொத்த தொழிலாளர்கள் 61 கோடி. இதில் 93 சதவிகிதம் அதாவது 56 கோடி பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாகத் தான் பணி செய்கிறார்கள். இதில் 58 சதவிகிதம் பேர் சுய வேலை வாய்ப்பில் இருப்பவர்கள். இவர்களுக்கு 1948 இல் நிறைவேற்றப்பட்ட குறைந்தபட்ச ஊதிய சட்டம் பொருந்தாது. இப்படி எண்ணற்ற காரணங்களால் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை சீரழித்து உரிமைகளை பறித்து, கார்ப்பரேட் தொழிலதிபர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவே மத்திய பா.ஜ.க. அரசு 29 சட்டங்களை 4 தொகுப்புச் சட்டங்களாக குறைத்து நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

 

Tags:    

மேலும் செய்திகள்