நீலகிரி: அச்சுறுத்தும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு
ராதாகிருஷ்ணன் என அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டு யானைகள் தனியாக ஊருக்குள் வந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், கூட்டமாக வரும் காட்டு யானைகள் சில மணி நேரத்தில் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்று விடுகிறது. தனியாக வரும் காட்டு யானை ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களை தாக்குவது, பயிர்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறது.
ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானை ஒன்று எஸ்டேட்டுகள், குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு பலரை தாக்கி கொன்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நியூஹோப் பகுதியில் மணி என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது.
இதேபோல் பலரை காட்டு யானை கொன்று உள்ளதாகவும், அதை பிடித்து முதுமலை அல்லது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென ஓவேலி மக்கள் இயக்கம், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில், ஓவேலி வனச்சரகர் வீரமணி தலைமையில் ஏராளமான வனத்துறையினர் ராதாகிருஷ்ணன் காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும் அதை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக முதுமலையில் இருந்து விஜய், வசீம் என 2 கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ராதாகிருஷ்ணன் காட்டு யானை, கும்கி யானைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பின்னர் யானையை பிடிக்க உயர் அதிகாரிகளின் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவு வந்தவுடன் யானை பிடிக்கப்படும் என்றனர்.