‘அரசியலமைப்பு நமக்கு அளித்துள்ள சுதந்திரத்தை யாராலும் பறிக்க முடியாது’ - செல்வப்பெருந்தகை
அரசியலமைப்பை பாதுகாப்பது ஒரு அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு சட்டப் புத்தகமாக மட்டுமே பார்க்கப்படக் கூடிய பொருள் அல்ல. இது இந்த நாட்டின் ஆன்மாவாகவும், மக்கள் ஆட்சியின் உயிரூற்றாகவும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் சமத்துவத்தையும் பாதுகாக்கும் உயர்ந்த காவலனாகவும் திகழ்கிறது. மதம், மொழி, சாதி, சமூக பின்னணி, பொருளாதார நிலை, பாலினம் என்று எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவரும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை உலகிற்கு முன் மிகத் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் இதுவே.
இந்த நாட்டின் வளர்ச்சியும் நீதியும் ஒற்றுமையும், அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளும் பொறுப்புகளுமே ஆதாரமாக உள்ளன. அரசியலமைப்பு நமக்கு அளித்துள்ள சுதந்திரம், வாய்ப்புகள் மற்றும் சமூகநீதியை யாராலும் பறிக்க முடியாது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வலியுறுத்தியபடி, அரசியலமைப்பைப் பாதுகாப்பது ஒரு அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல. அது ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய உயரிய கடமையாகும்.
இந்திய ஜனநாயகத்தின் புனித அடித்தளமான அரசியலமைப்பை தளர்த்த, மாற்ற, சிதைக்க, குறைக்க முயலும் எந்த செயலாக இருந்தாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும், மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதும், ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்துவதும், காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கும் அழியாத பொறுப்பு ஆகும். இந்தியாவின் ஜனநாயகப் பயணம், இந்த அரசியலமைப்பு தந்த வழிகாட்டுதலிலேயே தொடர்கிறது, அது எப்போதும் தொடரும்.
நாடு, மக்கள், ஜனநாயகம், குடியரசு - இவை அனைத்திற்கும் உயிரூற்றாகத் திகழ்வது அரசியலமைப்பே. அதன் உயரிய கொள்கைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். எந்த காலத்திலும், எந்த ஆட்சியிலும், எந்த அழுத்தத்திலும், இந்திய அரசியலமைப்பு மீதும் அதன் மதிப்புகள் மீதும் காங்கிரஸ் கட்சியின் உறுதி எப்போதும் தளராது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.