கடும் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்

டெல்டா பகுதிகளில் அடைபட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.;

Update:2025-12-01 10:59 IST

கோப்புப்படம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

டிட்வா புயல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழையை பொழியச் செய்துள்ளது. நாகை மாவட்டதில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. இதில் 50 ஆயிரம் பரப்பில் தாளடி நெற்பயிர்களும், சம்பா பயிர்களும் முழுவதுமாக பயிரில் மூழ்கிப்போய் உள்ளன. மேலும் 60 ஆயிரம் ஏக்கரில் பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து நூறு ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழைநீரால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக டெல்டா மாவட்டங்களில் 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மறு விவசாயமும் செய்திட இயலாது. இது விவசாயிகளுக்கு மிகப் பெரும் பாதிப்பாகும். அவர்கள் கடும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாவர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் இழப்பீடாக வழங்கிட வேண்டும்.

மத்திய அரசு தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். வழக்கம் போல், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு விவசாயிகளையும், மக்களையும் வஞ்சித்துவிடக் கூடாது. பல பகுதிகளில் மக்கள் குடியிருக்கும் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆடு, மாடுகள் இறந்துள்ளன. இவற்றையும் ஈடு செய்யக் கூடிய வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுந்து தொங்கிய மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பிரதாப் என்ற 19 வயது இளைஞரும், கும்பகோணம் வட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ரேணுகா என்ற 20 வயது இளம் பெண்ணும் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கும் உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். டெல்டா பகுதிகளில் அடைபட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்