அருவியில் குளித்தபோது பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர்.;
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்புழா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார். அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது அருகே குளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டார். இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் நின்றவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசெல்வம் (32 வயது) என்பதும், அங்கு ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மாரிசெல்வம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.