கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

போலீசாரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற முனீஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.;

Update:2025-03-06 08:39 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல நம்பிபுரத்தைச் சேர்ந்தவர் பூவன் மனைவி சீதாலட்சுமி (வயது 70). இவருடைய மகள் ராமஜெயந்தி (48). இவர் கணவரை விட்டு பிரிந்து பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். பூவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராமஜெயந்தி, தாயார் சீதாலட்சுமியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த ராமஜெயந்தி, தாயார் சீதாலட்சுமி ஆகியோர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் அணிந்திருந்த சுமார் 13 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. வீட்டில் தாய்-மகள் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நைசாக வீடுபுகுந்து அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சுமார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இதில் முக்கிய குற்றவாளி, முத்துலாபுரம் வைப்பாற்று படுகை காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து 6 டிரோன் கேமராக்களை காட்டுப்பகுதியில் பறக்கவிட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடைய முனீஸ்வரன் என்பவனை, குளத்தூர் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சுட்டுப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி போலீசாரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற முனீஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முனீஸ்வரனுக்கு தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முனீஸ்வரன் வெட்டியதில் காயமடைந்த எஸ்.ஐ.முத்துராஜா உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்