தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தேர்வு; 2.36 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-10-12 09:16 IST

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஆட்களை நிரப்ப, தேர்வை நடத்துவது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. இதன்படி, அக்டோபர் 12ந் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபரிலேயே தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால், அத்தேர்வை தாங்கள் எதிர்கொள்வதற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த தேர்வை சில வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும் 12-ந்தேதி நடைபெறவுள்ள போட்டி தேர்வை ஒத்திவைப்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. எனினும், திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்தது.

இதன்படி, தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக, நுழைவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வரும் ஆசிரியர்கள் அதற்காக தங்களை தயார்படுத்தி கொண்டு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தேர்வை 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்