வீட்டின் முன்பு கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசில் ஒப்படைத்த தனியார் நிறுவன ஊழியர்

நகைகளை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த கோட்டூர்புரம் போலீசாருக்கு ஜான் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.;

Update:2025-11-03 08:54 IST

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் புதுச்சேரி சாலையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 49). இவர், நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு கடந்த 31-ந்தேதி அன்று பிளாஸ்டிக் கவர் கீழே கிடந்துள்ளது. அதனை சிவகுமார் எடுத்து பார்த்தபோது, அதில் தங்கச்சங்கிலி, கைச்செயின் என 4 நகைகள் இருந்துள்ளன. யாரும் தேடி வராததால் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சிவகுமார் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் கோட்டூர்புரம் போலீசார் சிவகுமார் வீட்டுக்கு சென்று நகையை பெற்று சென்றனர். அதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 57 கிராம் நகைகள் இருந்தன. இந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் கோட்டூர்புரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் நிலையத்துக்கு ஜான் என்ற வாலிபர், தனது சித்தியுடன் வந்திருந்தார். அவர், திருமண ஏற்பாட்டுக்காக பெயர் பதிக்க எடுத்து சென்ற நகைகள் மாயமாகிவிட்டதாக தெரிவித்தார். சிவகுமார் வீட்டின் முன்பு பிளாஸ்டிக் கவரில் கிடந்தது அவர்களுடைய நகைகள்தான் என்பதை போலீசார் உறுதி செய்து அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

நேர்மையாக நகையை ஒப்படைத்த சிவகுமாருக்கும், அதனை பத்திரமாக ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்த கோட்டூர்புரம் போலீசாருக்கும் ஜான் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். சிவகுமாரை போலீசாரும் பாராட்டினர்.

இதேபோல் சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் வேல்முருகன், தனது கடையில் கலைவாணன் என்பவர் விட்டுச்சென்ற 5 பவுன் தாலி சங்கிலியை ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனை போலீசார் கலைவாணன் மனைவி ரஞ்சனியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்