தூத்துக்குடியில் முகநூல் லிங்க் மூலம் ரூ.17.50 லட்சம் மோசடி: ரூ.2 லட்சம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகநூல் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என லிங்க் வந்துள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகநூல் (Facebook) பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என லிங்க் வந்துள்ளது. இதனையடுத்து அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில் அது ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) குரூப்பில் இணைத்துள்ளது. பின்னர் மேற்சொன்ன நபர் அந்த வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது அந்த மர்ம நபர் USPRO என்னும் ஆன்லைன் டிரேடிங் செயலியின் லிங்க் அனுப்பி அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் மேற்சொன்ன நபர் அதனை பதிவிறக்கம் செய்து சிறிய முதலீடு செய்து சிறிய லாபம் பெற்றுள்ளார். பின்னர் அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என அந்த மர்ம நபர்கள் கூறியதையடுத்து பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இதனையடுத்து மேற்சொன்ன நபர் முதலீடு செய்த பணத்திற்கு லாபம் வரவில்லை என்று அந்த மர்ம நபர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூடுதலாக பணத்தை கட்டினால்தான் லாபம் கிடைக்கும் என்று வற்புறுத்தியுள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மேற்சொன்ன நபர் இதுகுறித்து NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவுப்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு, அதில் ரூ.2 லட்சம் பணம் திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் மீதி பணத்தை மீட்கவும், குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சட்டரீதியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை நேற்று (7.5.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
மேலும் அவர், இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.