தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்

மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.;

Update:2025-06-02 06:39 IST

சென்னை,

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி (அதாவது இன்று) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இத்தனை நாட்கள் கோடை விடுமுறையில் குதூகலித்திருந்த மாணவ-மாணவிகள் காலையே பரபரப்பாக பள்ளிகளுக்கு செல்ல தயாரானார்கள். தூங்கி கொண்டிருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு 'செல்ல அடி' கொடுத்து பெற்றோர் எழுப்பி ஆயத்தப்படுத்தினார்கள்.

அப்படி... இப்படி... என்று சலிப்புடன் வந்த மாணவர்கள், பள்ளி வாசலை தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்தனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் வகுப்புக்குள் நுழைந்தனர். அனைத்து பள்ளிகளிலும் இன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, அட்டவணை உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2025-26ஐ பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.

வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதனால் பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான சூழல் அமையவில்லை. இதனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள இந்த சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்