அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டையை தடுக்க ரகசிய கண்காணிப்பு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.;

Update:2025-10-13 18:07 IST

சென்னை,

தீபாவளியை ஒட்டி தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தொழில்துறை சார்ந்த அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்பட சுமார் 20 துறைகளில், ஒவ்வொரு ஆண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து, லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டும் அரசு துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டையைத் தடுப்பதற்காக, லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக செயல்படும் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் சிறப்பு தனிப்படையினர், அரசுத் துறை சார்ந்த அதிகாரிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல்களை திரட்டிவரும் லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் திடீர் சோதனைகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 38 தனிப்படைகள் இதற்காக களமிறங்கியுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அல்லது துணை சூப்பிரண்டு தலைமையிலான அதிகாரிகள் இந்தக் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தங்களது பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

“லஞ்சம் வாங்குவதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம்” என்ற பிரசாரத்தை வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியிலும் பரப்பி வருகின்றனர். எந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகளாவது தங்களிடம் தீபாவளிக்காக லஞ்சமாக பணமோ பொருளோ கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டைக்கு பயந்து சில அதிகாரிகள், “எனக்கு நீங்கள் பணமாக தர வேண்டாம்; அதற்குப் பதிலாக என் வீட்டில் பரிசுப் பொருளை இறக்கிவிடுங்கள்” என்று கூறுவது வழக்கம். இதற்கு இணங்கி தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்குவது வழக்கம்.

அதுபோன்று சட்டவிரோதமாக பரிசுப் பொருட்கள் லஞ்சமாக வழங்கப்படுகிறதா என்பதையும் போலீசார் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:“தீபாவளியை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்பு ஒரு கோடியைத் தாண்டிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது,” என்றார். இதன் காரணமாக, அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்