செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட கோர்ட்
பண மோசடி உள்ளிட்ட இரு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கோர்ட்டில் ஆஜரானார்.;
கோப்புப்படம்
சென்னை,
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகினர். செந்தில்பாலாஜியின் உதவியாளர் கார்த்திகேயன் உள்பட இருவர், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உரிய முடிவு வரும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
கடந்த 2011-2015-ம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கிலும் செந்தில்பாலாஜி நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் மொத்தம் 2 ஆயிரத்து 222 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 150 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ள கோர்ட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.