சமூக நீதி அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது: ஆதவ் அர்ஜுனா பேட்டி
நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவையான பொருட்களை த.வெ.க. வழங்கும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.;
சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6-வது மண்டல தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தற்போது பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 31.07.2025 பணி நிலைமையிலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் இன்று 119-வது நாளாக போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி என்ற 4 தூய்மைப் பணியாளர்கள் 17.11.2025 முதல் 10 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், பொதுச் செயலாளர் (தேர்தல் பிரச்சார மேலாண்மை) ஆதவ் அர்ஜுனா, துணைப் பொதுச் செயலாளர் ராஜ் மோகன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் அம்பத்தூருக்கு நேரில் சென்று தூய்மைப் பணியாளர்களை சந்தித்து அவர்களது உரிமைப் போராட்டத்திற்கு த.வெ.க. என்றும் துணை நிற்கும் என்று அவர்கள் உறுதியளித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
உண்ணாவிரதம் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்தப் பின்னர் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தூய்மைப் பணியாளர்கள், நமது சகோதரிகள் போராட்டக் களத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது தமிழக அரசு அவர்களை இரவோடு இரவாக தூக்கிப் போட்டு போராட்டத்தை ஒடுக்கினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு அரசு மாநில மக்களுக்காக செயல்படாமல், திமுக என்ற ஒரு கட்சிக்காகதான் செயல்படுகிறது.
தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டபோது நடந்த அடக்குமுறை குறித்து எதுவுமே தெரியாதது போல முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். போராடிய இடதுசாரி தோழர்கள் கடைசியில் அவர்கள் பாதுகாப்புக்கே உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என்று கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின், முதல்வரான பிறகு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். 10 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் 4 பெண் தொழிலாளர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு முழுக்க முழுக்க முதல்வரே பொறுப்பு என்பதை தவெக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
போராடும் தோழர்கள்/தோழிகளின் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம் கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், கூட்டணி கட்சிகளான வி.சி.க., கம்யூனிஸ்ட் ஆகியோர் வந்து இந்த மக்களை சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டில் SC/ST கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது? இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொடுப்பது போன்ற பண்ணையார்தனத்தை தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. சமூக நீதி என்று கூறிக்கொள்ளும் அரசு ஆதிதிராவிட மக்களுக்கு அராஜகத்தை நிகழ்த்தி வருகிறது. இது தொடர்பாக, விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை த.வெ.க. முன்னெடுக்கும். மக்களை சாகடித்து ஊழல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1,953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அடிப்படை ரேஷன் பொருட்களை தவெக வழங்கும். அவர்களின் குழந்தைகளுக்கான கல்விக்கட்டண பட்டியலையும் கேட்டிருக்கிறோம். அதற்கான உதவிகளையும் த.வெ.க. செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.